ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி
சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி. அதைத்தான் நாம் இன்று இங்கு காண இருக்கிறோம். நம்ம ஊர் சிக்கன் கிரேவிக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் காரம் தான். நம்ம ஊர் சிக்கன் கிரேவியை விட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும்.
நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு நல்ல மாற்று. காரம் அதிகம் விரும்பாதவர்கள் இதில் நாம் சேர்க்கும் மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாயை குறைத்து கொள்ளலாம். காரத்தை விரும்புபவர்கள் இதை அப்படியே செய்து நன்கு காரசாரமாக சாதத்தில் ஊற்றியோ அல்லது சப்பாத்தி, நான், பரோட்டா போன்றவைக்கு சைட் டிஷ் ஆகவோ இதை சுவைக்கலாம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா?
இப்பொழுது கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
- 500 கிராம் சிக்கன்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 10 to 15 தேங்காய் துண்டுகள்
- 3 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 2 மேஜைக்கரண்டி தனியா
- 1 மேஜைக்கரண்டி கசகசா
- ½ மேஜைக்கரண்டி சீரகம்
- ½ மேஜைக்கரண்டி சோம்பு
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 பட்டை துண்டு
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)
- 5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும். (150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.