காலிஃப்ளவர் பக்கோடா
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காலிஃப்ளவர் பக்கோடா. இவை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டி என்றால் அது மிகை ஆகாது.
மாலை நேரங்களில் காபியுடனோ அல்லது டீயுடனோ பக்கோடாவை சுவைப்பதில் இருக்கும் ருசியே தனி தான். பெரும்பாலானோருக்கு இவை மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. என்னதான் புதிதாக பல விதமான சிற்றுண்டிகள் உதயம் ஆகியிருந்தாலும் பக்கோடாவிர்க்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. மாலை நேரங்களில் சுட சுட பக்கோடாவை செய்து விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி.
காலிஃப்ளவர் பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் காலிஃப்ளவர், வெங்காயம், கடலை மாவு, மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மாலை நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தால் யோசிக்காமல் இந்த எளிதாக செய்யக்கூடிய காலிஃப்ளவர் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள். அது மட்டுமின்றி உங்கள் குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே காலிஃப்ளவர் பக்கோடா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
காலிஃப்ளவர் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்
- ½ கப் கடலை மாவு
- ¼ கப் அரிசி மாவு
- ¼ கப் சோள மாவு
- 1 முழு காலிஃப்ளவர் பூ
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 சிட்டிகை கேசரி பவுடர்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
காலிஃப்ளவர் பக்கோடா செய்முறை
- முதலில் காலிஃப்ளவர், வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்ட பின் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு காலிஃப்ளவரில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, ஒரு சிட்டிகை கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் ஒவ்வொன்றாக காலிஃப்ளவரை எடுத்து பக்குவமாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும்.
- காலிஃப்ளவர் பக்கோடா நன்கு பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து பின்பு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே மீதமுள்ள காலிஃப்ளவர்களையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும்போதே அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை அதில் போட்டு அதை பொரித்து எடுத்து காலிஃப்ளவர் பக்கோடாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.